ராகுலின் கேப்டன்சியை விமர்சித்த கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் இரண்டாவது டெஸ்டில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா மண்ணைக் கவ்வியது. முதல் டெஸ்டுக்கு பிறகு நடந்த எந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டார். அதிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி குறித்து பேசிய கவாஸ்கர், "பார்ட்னர்ஷிப் இருக்கும் போதெல்லாம் கே.எல்.ராகுலுக்கு எந்தவொரு யோசனைகளும் இல்லை.செய்வதறியாமல் திகைத்தார். பார்ட்னர்ஷிப் இருக்கும்போது, சில சமயங்களில் கேப்டன் தடுமாறுவார்கள். அதுதான் ராகுலுக்கும் நடந்தது என்று நினைக்கிறேன். பேட்டிங் செய்வதற்கு தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் மிகவும் நன்றாக இருந்தது.
பந்து மிகவும் அழகாக பேட்டில் வந்து கொண்டிருந்தது, இருப்பினும் இந்தியாவின் ஆட்டம் போதுமானதாக இல்லை. சில சமயங்களின் போது, ராகுலுக்கு யோசனைகள் இல்லாமல் போனது போல் இருந்தது.
கேஎல் ராகுலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் இந்தியாவின் இரண்டு அனுபவமிக்க டெத்-ஓவர் பந்துவீச்சாளர்கள், ஆனால் அவர்களுக்கு கடைசி 5-6 ஓவர்கள் மிச்சம் வைத்திருக்க வேண்டும். முன் கூட்டியே அவர்களை பயன்படுத்தி இருக்க கூடாது.
இது ராகுல் கேப்டனாக ஆரம்ப நாட்கள், ஒருவேளை விஷயங்கள் மாறும், ராகுலுக்கு கேப்டன் பதவியில் அதிக அனுபவம் இல்லை. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ரஞ்சி டிராபி அல்லது லிஸ்ட் ஏ எந்த ஃபார்மேட் போட்டியிலும் கேப்டனாக இருந்ததில்லை.
ஐபிஎல்-ல் அவரது கேப்டன்சியைப் பார்த்தால் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை” என்று கவாஸ்கர் ராகுலை விமர்சித்துள்ளார்.