ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக இவர் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்திய அணி தனது முதல் சர்வதேச தொடரை முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 2 - 2 என சமநிலையான முடிவு எட்டப்பட்டது.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்க, ரசிகர்கள் பலரின் கவனமும் டி20 உலகக்கோப்பை தொடரின் மீது திரும்பியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை வரும் செப்டம்பர் 15க்குள் இறுதி செய்ய வேண்டும் என ஐசிசி அறிவித்தது. எனவே இந்திய ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு சுனில் கவாஸ்கரும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “ரோஹித் சர்மாவுக்கு ஹர்ஷல் பட்டேல் தான் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். அணியில் புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா ஆகியோருடன் இவரும் இணைந்தால் பவர் ப்ளே ஓவர்களில் நல்ல போட்டியை காண முடியும். ஹர்ஷல் பட்டேலுக்கு பெரும்பாலும் முதல் ஓவரை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
இதே போல டெத் ஓவர்களில் ஸ்லோயர் பந்துகளை வீசி ரன்களை கட்டுப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை. ஹர்ஷல் அதனை சரியாக செய்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனான 3ஆவது போட்டியில் சரியான லைன் மற்றும் லெந்த்-ஐ பிடித்துவிட்டார். தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கினார். ஆனால் அவரிடம் ஒரு பதற்றமும் தெரியவில்லை. இதனால் தான் அவர் இந்தியாவின் மிக முக்கிய சொத்து” என்று தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்ஷல் பட்டேல் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பவுலராகும். 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போல அவரின் எகானமி ரேட்டும் 7.23 மட்டுமே ஆகும். இதில் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.