அஸ்வினால் கீ ப்ளேயராக இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அவர் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரது வருகை காரணமாக இடையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
இருப்பினும் தனது விடாமுயற்சியின் காரணமாக தற்போது 37 வயதிலும் மீண்டும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இருந்தாலும் இந்திய வீரர்கள் உலக கோப்பையினை கைப்பற்றி சாம்பியனாக வர வேண்டும் இந்திய அணிக்காக அனைவரும் சப்போர்ட் செய்வோம் என தனது யூடியூப் சேனலில் கூட ரசிகர்களிடம் பேசி இருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த அக்சர் பட்டேல் காயம் காரணமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அந்த இடத்திற்கு மாற்றுவீரராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அஸ்வினின் இடம் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இந்திய அணியில் தற்போது புதிய பந்தினை துவங்குவதற்கு பும்ரா, சிராஜ், ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பந்து பழையதாக மாறிய பின்னர் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி எதிரணி வீரர்களுக்கு அழுத்தத்தை தரும் ஒரு பந்துவீச்சாளர் நமக்கு தேவை.
அந்த வகையில் பார்க்கும் போது அனுபவ வேகப்பந்து வீச்சாளரான அஸ்வின் பெரிய அளவில் தவறுகளை செய்யாமல் எதிரணியை கட்டுக்குள் வைக்கும் ஒரு பவுலராக திகழ்வார் என்று கூறியுள்ளார். மிடில் ஓவர்களில் மைதானத்தில் டர்ன், பவுன்ஸ், ஸ்பின் என எதுவுமே இல்லாத மைதானத்தில் பவுலர்கள் அடி வாங்கும் போது நிச்சயம் அந்த இடத்திலும் அஸ்வினால் சிறப்பாக செயல்பட முடியும் அதன் காரணமாகவே அவர் அந்த இடத்தில் கீ ப்ளேயராக இருப்பார்” என தெரிவித்துள்ளார்.