ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்க இதுவே காரணம் - சுனில் கவஸ்கர்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 237 ரன்கள் அடித்தது.
இந்த போட்டியில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக ரோஹித்துடன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். ரிஷப் பந்த் இதுவரை ஓபனிங்கில் இறங்கியதே இல்லை. ராகுல் அணியில் இருந்தபோதும் ரிஷப் பந்த தொடக்க வீரராக இறக்கப்பட்டது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இன்னிங்ஸின் தொடக்கத்தில் இருக்கும் பவர்ப்ளே கட்டுப்பாடுகளை பயன்படுத்தி ரிஷப் பந்த் அடித்து ஆடுவார் என்ற நம்பிக்கையில் அவர் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். இது வெறும் சோதனை முயற்சி தானே தவிர, அவர் ஓபனிங்கில் பெரிய ஸ்கோர் செய்தாலும், தொடர்ச்சியாக ஓபனிங்கில் இறக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் ஓபனிங்கில் ஆட கிடைத்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக்கொள்ளாமல், குழப்ப மனநிலையிலேயே பேட்டிங் ஆடி 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ரிஷப் பந்தை ஃபினிஷராக பயன்படுத்தலாம் என்று குரல் கொடுத்துவரும் சுனில் கவாஸ்கர், ரிஷப் தொடக்க வீரராக இறக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “முதல் 10 ஓவர்களை மனதில் வைத்துத்தான் ரிஷப் தொடக்க வீரராக இறக்கப்பட்டிருக்கிறார். முதல் 10 ஓவர்களில் இருக்கும் ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி அவர் அடித்து ஆடுவார் என்ற நம்பிக்கையில் தொடக்க வீரராக இறக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு சோதனை முயற்சிதான். ஃபினிஷர் யார் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.
பந்தை ஃபினிஷராக பயன்படுத்தலாம். ஃபினிஷராக ஆடும்போது மட்டும்தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அனைத்து பந்துகளையும் அடித்து ஆடமுடியும். ஓபனிங்கில் இறக்கப்பட்டதை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்றால், உன்னிடம் இருந்து நாங்கள் (இந்திய அணி நிர்வாகம்) எதிர்பார்ப்பது ஸ்கோர்.. எனவே நீ ஸ்கோர் செய்தாக வேண்டும் என்று ரிஷப்பிற்கு பொறுப்புணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடக்க வீரராக இறக்கப்பட்டிருப்பார்” என தெரிவித்துள்ளார்.