அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில், அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில், நேற்று முதல் விளையாடுகிறது. மழை இருந்த காரணத்தினால் வேகப்பந்து வீச்சுக்கு மிகச் சாதகமான சூழ்நிலையில் இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்தது.
இதன் காரணமாக இந்திய விக்கெட்டுகள் வேகமாக விழுந்தன. நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது ஒரே நம்பிக்கையாக ஆட்டம் இழக்காமல் 70 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் இருக்கிறார். தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சில ஆச்சரியங்கள் இருந்தது.
அதில் முக்கியமானது, இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரஹானே நீக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தினால் ரகானே தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் அடுத்து வெஸ்ட் இண்டிஸ் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் அந்த தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால், தென் ஆப்பிரிக்க தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டு விட்டார். ஒரு இரண்டு வருடம் முழு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் இருப்பார் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ரஹானே குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தின் ஆடுகளத்தை பற்றி மக்கள் தற்பொழுது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது பந்துகளை சந்தித்து விளையாடுவது கடினமாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பி வந்த அவர், தன்னை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதை காட்டினார். இந்திய அணி அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்கவில்லை.
எனவே வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும். ஏனென்றால் அவர் வெளிநாட்டு டெஸ்ட்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஒருவேளை அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.