இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியதுடன், இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இத்தொடரின் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ஷுப்மன் கில் 39 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களையும், ரியான் பராக் 26 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா 26 ரன்களையும், குசல் மெண்டிஸ் 43 ரன்களையும் மற்றும் குசல் பெரேரா 46 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீர்ர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது. இதனால் போட்டி சமனில் முடிந்து, அதன்பின் நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 3 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணி சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே வெறிபெற்று அசத்தியது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தரும், இத்தொடரின் தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவும் கைப்பற்றினர்.
இந்நிலையில் இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் டேவிட் வார்னர் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோரது சாதனைகளை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 7 முறை கைப்பற்றி முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் தலா 05 முறை தொடர் நாயகன் விருதை வென்று ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இரண்டாம் இடத்திக் நீடித்து வந்த நிலையில், தற்சமயம் இந்திய அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள்
- விராட் கோலி - 07 முறை
- சூர்யகுமார் யாதவ் - 05 முறை
- பாபர் ஆசாம் - 05 முறை
- டேவிட் வாரினர் - 05 முறை
- ஷாகிப் அல் ஹசன் - 05 முறை