டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை - சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Nov 27 2023 12:23 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரம் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போத 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர். 

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இந்த போட்டியில் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை. அவர்களே ஆரம்பத்திலிருந்து ரன்களை மிக வேகமாக குவித்துவிட்டனர். நான் இந்த போட்டிக்கு முன்னதாக நமது அணி வீரர்களிடம் ஒரு சில விடயங்களை மட்டும்தான் கூறினேன். 

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் நாம் முதலில் பேட்டிங் செய்ய வேண்டியதாக இருந்தாலும் இருக்கும் எனவே தயாராகிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அதனை சரியாக கவனித்த வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் டியூ அதிகமாக இருந்தது. இருந்தாலும் நாங்கள் பெரிய அளவில் ரன்களை குவித்திருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த போட்டியின் போதே ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்த்து அசந்து விட்டேன். இன்றும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை