டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!

Updated: Tue, Apr 01 2025 13:08 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 300 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 ரன்கள் எடுத்தது அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 20 ரன்களைச் சேர்ததத மூலம் டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களையும் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 5ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன் இந்திய அணிக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். சூர்யகுமார் யாதவின் டி20 கெரியரைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 312 போட்டிகளில் 288 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 34.21 என்ற ஸ்டிரைக் ரெட்டில் 8007 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்

  • 12976 - விராட் கோலி
  • 11851 - ரோஹித் சர்மா
  • 9797 - ஷிகர் தவான்
  • 8654 - சுரேஷ் ரெய்னா
  • 8007 – சூர்யகுமார் யாதவ்*

இதுதவிர்த்து மிகக் குறைந்த பந்துகளில் 8000 டி-20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 5256 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 4749 பந்துகளில் 8000 ரன்களைக் கடந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறைந்த பந்துகளில் 8000 டி20 ரன்கள்

  • ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 4749 பந்துகள்
  • சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 5256 பந்துகள்
  • கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 5278 பந்துகள்

இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 62 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை