விராட் கோலியின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 45 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 79 ரன்கள் எடுத்த நிலையில் பதும் நிஷங்காவும், 20 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேராவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
இதனால் இலங்கை அணியானது 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 126 சர்வதேச டி20 போட்டிகளில் 16 முறை ஆட்டநாயகன் விருதைவென்றிருந்தார். அதனை தற்போது சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்
- சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 16 முறை (69 போட்டிகளில்)*
- விராட் கோலி (இந்தியா) - 16 முறை (126 போட்டிகளில்)
- சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே) - 15 முறை (91 போட்டிகளில்)
- முகமது நபி (ஆஃப்கானிஸ்தான்) - 14 முறை (129 போட்டிகளில்)
- ரோஹித் சர்மா (இந்தியா) - 14 முறை (159 போட்டிகளில்)