கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!

Updated: Fri, Dec 22 2023 22:02 IST
Image Source: Google

இந்திய டி20 அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். தற்போது அவர் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாகவும் உள்ளார். அடுத்து இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. 

முன்னதாக ரோஹித் சர்மா டி20 அணியில் இருந்து சில விடுப்பு எடுத்துக் கொண்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 1 - 1 என தொடரை சமன் செய்து இருந்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங் செய்த போது கணுக்காலை மோசமான முறையில் பிசகிக் கொண்டார். அதனால், வலியில் துடித்து பாதி போட்டியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில், அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

 

அவருக்கு இரண்டாம் நிலை தசைநார் கிழிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், அவரால் குறைந்தது மூன்று மாதத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது எனவும் கூறப்படுகிறது. இந்திய டி20 அணி அடுத்து ஜனவரியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை