டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தனித்துவ சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!

Updated: Mon, Jun 17 2024 23:31 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதிலும் குறிப்பாக அந்த அணியில் சார்லஸ் அமினி 17 ரன்களையும், செசே பாவ் 12 ரன்களையும், நோர்மன் வனுவா 14 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், டிம் சௌதீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபெர்குசன் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

 

அதன்படி இப்போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய லோக்கி ஃபெர்குசன் அதில் ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்காமல் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசியதுடன், அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசிய வீரர் எனும் தனித்துவமான மற்றும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

அதுமட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கனடாவின் சாத் பின் ஜாஃபருக்குப் பிறகு ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை லோக்கி ஃபெர்குசன் பெற்றுள்ளார். அதேசமயம் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகலையும், சாத் பின் ஜாஃபர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை