T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!

Updated: Sun, Jun 16 2024 07:43 IST
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மிக முக்கியாமன் 35ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் முன்ஸியுடன் இணைந்த பிராண்டன் மெக்முல்லன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அதிலும் தொடர்ந்து அதிரடி காட்டிய பிராண்டன் மெக்முல்லன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.  

இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 89 ரன்களைக் கடந்த நிலையில், 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்திருந்த ஜார்ஜ் முன்ஸி விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் மெக்முல்லனும் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 60 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய மேத்யூஸ் கிராஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய மைக்கேல் லீஸ்கும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில்  கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை