T20 WC 2024, Semi Final 1: ஆஃப்கானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Jun 27 2024 08:14 IST
T20 WC 2024, Semi Final 1: ஆஃப்கானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா - இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஆறு ஓவர்களிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்பதீன் நைப் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் தனது முதல் ஓவரை வீசிய காசிசோ ரபாடா முதல் பந்திலேயே இப்ராஹிம் ஸத்ரானை களீன் போல்டாக்கியதுடன், அந்த ஓவரின் நான்காவது பந்தில் அனுபவ வீரர் முகமது நபியின் விக்கெட்டையும் க்ளீன் போல்ட்டின் மூலம் கைப்பற்றி மிரட்டினார். 

இதனால் ஸ்தம்பித்து நின்ற ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்த அதிர்ச்சியாக நங்கெயலியா கரோட்டேவும் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களிலேயே 28 ரன்களை மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்ட்ஜே வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
 
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 28 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் கேப்டன் ரஷித் கான் மற்றும் கரீம் ஜனாத் இணை விளையாடியது. ஓரளவு தாக்குப்பிடித்த இருவரும் தலா 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய நூர் அஹத், நவீன் உல் ஹக் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து எளியெ இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரிஸா ஹென்ரிக்ஸ் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

அதேபோல் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றியும் எளிதானது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ரீஸா ஹென்றிக்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியானது முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை