T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Wed, Jun 19 2024 23:24 IST
T20 WC 2024, Super 8: ஆண்ட்ரிஸ் கௌஸ் போராட்டம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருத இத்தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து அமெரிக்க அணியான பலப்பரீட்சை நடத்தியது. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸா ஹென்றிக்ஸ் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் டி காக்குடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். மறுபக்கம் தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டிய நிலையில், 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லரும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஹர்மீத் சின் பந்துவீச்சில் அவரிடமே விக்கெட்டை கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 46 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் இணைந்த ஹென்ரிச் கிளாசென் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைச் சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சௌரவ் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவன் டெய்லர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் நிதீஷ் குமார் 8 ரன்களுக்கும், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கோரி ஆண்டர்சன் 12 ரன்களுக்கும், ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் அமெரிக்க அணி 76 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஆண்ட்ரிஸ் கௌஸுடன் இணைந்த ஹர்மீத் சிங்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரிஸ் கௌஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் காரணமாக அமெரிக்க அணி வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஷம்ஸி வீசிய 18ஆவது ஓவரில் கௌஸ் மற்றும் ஹர்மீத் இருவரும் இணைந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், அந்த ஓவரில் 22 ரன்களைச் சேர்த்தனர். 

இதன்மூலம் அமெரிக்க அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 19ஆவது ஓவரை வீசிய காகிசோ ரபாடா, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்மீத் சிங் விக்கெட்டை வீழ்த்தினார். இப்போட்டியில் 22 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மீத் சிங் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 38 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேலும் ரபாடா வீசிய அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் அமெரிக்க அணியானது கடைசி ஓவரில் 26 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.  

ஆனால் இப்போட்டியில் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியின் வெற்றிக்காக போராடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அமெரிக்க அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை