T20 WC 2024: நோர்ட்ஜே, ரபாடா அபாரம்; இலங்கையை 77 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் பந்தில் இருந்தே தடுமாறிய நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பதும் நிஷங்கா வேகப்பந்து வீச்சாளர் ஒட்னீல் பார்ட்மேன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 11 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசர்ங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா ஆகியோர் கேசவ் மஹாராஜின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸும் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து இணைந்த சரித் அசலங்கா - ஏஞ்சலோ மேத்யூஸ் அணியை கரைசேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரித் அசலங்கா 6 ரன்களுக்கும், தசுன் ஷனகா 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸும் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய மதீஷா பதிரானா மற்றும் நுவான் துஷாரா ஆகியோரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இலங்கை அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆன்ரிச் நோர்ட்ஜே 4 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் காகிசோ ரபாடா, கேசாவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஓட்னில் பிராட்மேன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.