T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை!

Updated: Mon, Jun 17 2024 09:21 IST
T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் அடுத்த சுற்றுக்கு 7 அணிகள் முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் உள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் குசால் மெண்டிஸுடன் இணைந்த தனஞ்செயா டி சில்வா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து தனஞ்செயா டி சில்வாவும் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய சரித் அசலங்கா ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்ட தசுன் ஷனகாவும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, இலங்கை அணியானது 166 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - வநிந்து ஹசரங்கா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களையும், கேப்டன் வநிந்து ஹசரங்கா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவிட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேக்ஸ் ஓடவுட் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மைக்கேல் லெவிட்டும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர்கள் விக்ரம்ஜித் சிங் 7 ரன்களுக்கும், சைப்ரன் ஏங்கல்பிரெக்ட் 11 ரன்களுக்கும், பாஸ் டி லீட் 3 ரன்களுக்கும், லோகன் வான் பீக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் நெதர்லாந்து அணி 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் எட்வர்ட்ஸும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் நெதர்லாந்து அணியானது 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் வநிந்து ஹசரங்கா மற்றும் மதீஷா பதிரான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி விளையாடிய 4 போட்டிகாளில் ஒரு வெற்றியை மற்றுமே பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை