T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆஃப்கானிஸ்தான்!

Updated: Sun, Jun 23 2024 10:21 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 118 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் 2 ரன்களுக்கும், கரீம் ஜனத் 13 ரன்களுக்கும், குல்பதீன் நைப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் முகமது நபி ஒரு சில பவுண்டரிகளை அடித்த அணிக்கு தேவையான ரன்களைச் சேர்க்க, ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

அதன்பின் எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்த டேவிட் வார்னரும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணியானது 32 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை பொறுப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின் 11 ரன்கள் எடுத்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் டேவிட்டும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய கிளென் மேக்ஸ்வல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணிக்கு நமபிக்கை அளித்தார்.

ஆனால் அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 59 ரன்கள் சேர்த்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லும் தனது விக்கெட்டை இழக்க, அட்டத்தின் பரபரப்பும் கூடியது. பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட் 5 ரன்களுக்கும், பாட் கம்மின்ஸ் 3 ரன்களுக்கும், ஆஷ்டன் அகர் 2 ரன்களுக்கும், ஆடம் ஸாம்பா 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 19.2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்பதீன் நைப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து புது சரித்திரம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை