T20 WC 2024, Super 8: மழையால் பாதித்த ஆட்டம்; டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!

Updated: Fri, Jun 21 2024 10:17 IST
T20 WC 2024, Super 8: மழையால் பாதித்த ஆட்டம்; டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றத (Image Source: Google)

9ஆவது சீசன் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் 16 ரன்களிலும், ரிஷாத் ஹொசைன் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேச அணியானது 67 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் வந்த அதிரடி வீரர் மஹ்முதுல்லா 2 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் பாட் கம்மின்ஸின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோயும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இந்த விக்கெட்டானது பாட் கம்மின்ஸின் ஹாட்ரிக் விக்கெட்டாகவும் அமைந்தது. இறுதியில் தஸ்கின் அஹ்மத் 13 ரன்களைச் சேர்க்க, வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 31 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 14 ரன்களுடனும் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை