T20 WC 2024, Super 8: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Mon, Jun 24 2024 10:40 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்ததியது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேய்ஸ் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும், ரூதர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ரோஸ்டன் சேஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட நிலையில் 15 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அகீல் ஹொசைனும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அல்ஸாரி ஜோசப் 11 ரன்களையும், குடகேஷ் மோட்டி 4 ரன்களையும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தப்ரைஸ் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் டி காக் அதிரடியாக தொடங்க, மறுபக்கம் ரிஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதே ஓவரில் குயின்டன் டி காக்கும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, மழை குறுக்கிட்டதாக ஆட்டம் தமதமானது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இணைந்த கேப்டன் மார்க்ரம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்க்ரம் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேசவ் மஹாராஜும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த ஓவரை ஒபேத் மெக்காய் வீசினார்.

அதனை எதிர்கொண்ட மார்கோ ஜான்சென் முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இரண்டாவது அணியாக தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை