T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கிய முகமது ரிஸ்வான் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களிலும், ஃபகர் ஸமான் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் பாபர் ஆசாமுடன் இணைந்த ஷதாப் கான் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
அதன்பின் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் தனது அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் கானும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாமும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மதும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாஹின் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 23 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுகளையும், சௌரவ் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மொனாங்க் படேல் - ஸ்டீவன் டெய்லர் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த மொனாங்க் படேல் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது.
இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மொனாங்க் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரிஸ் கஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த மொனாங்க் படேலும் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் - நிதீஷ் குமார் இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் இறுதியில் இருவரும் பவுண்டரி அடிக்க தவறிய காரணத்தால் அமெரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தரப்பில் கடைசி ஓவரை ஹாரிஸ் ராவுஃப் வீச, அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் மூன்று ரன்களை மட்டுமே கொடுத்து பாகிஸ்தானை முன்னிலைப் படுத்தினார். அதன்பின் நான்காவது பந்த ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் விளாச, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், நிதீஷ் குமார் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன்செய்து அசத்தினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களையும், நிதீஷ் குமார் 14 ரன்களையும் சேர்க்க, அமெரிக்க அணியும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இப்போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொள்ள அமெரிக்க அணி தரப்பில் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஹர்மீட் சிங் ஆகியோர் களமிறங்க பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் பந்துவீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஆரோன் ஜோன்ஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.
அதன்பின் இரண்டாவது பந்தில் இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னையும் எடுத்தார். நான்காவது பந்தில் வைடுடன் சேர்த்து இரண்டு ரன்களும், மீண்டும் வீசப்பட்ட நான்காவது பந்தில் ஒரு ரன்னும் வந்த நிலையில் அடுத்த பந்தும் வைடுடன் சேர்த்து இரண்டு ரன்களை எடுக்க, கடைசி பந்தும் வைடுடன் சேர்த்து மூன்று ரன்களை அமெரிக்க அணி சேர்த்தது. அதன்பின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுததுடன் சேர்த்த அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் 18 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 19 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தரப்பில் இஃப்திகார் அஹ்மத் - ஃபகர் ஸமான் களமிறங்க, அமெரிக்க அணி தரப்பில் சூப்பர் ஓவரை நேத்ரவால்கர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை தவறவிட்ட இஃப்திகார், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன்பின் இரண்டாவது பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்த இஃப்திகார் அஹ்மத் மிலந்த் குமாரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து ஷதாப் கான் களமிறங்க, அந்த ஓவரின் நான்காவது பந்து அவரது பேடில் பட்டு பவுண்டரிக்கு செல்ல ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது.
அதன்பின் 5ஆவது பந்தில் ஷதாப் கான் இரண்டு ரன்களை எடுக்க, பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த பந்தில் ஷதாப் கானால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியால் சூப்பர் ஓவரில் 13 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தங்களது முதல் சர்வதேச போட்டியிலேயே அமெரிக்க அணி வெற்றியைப் பதிவுசெய்து சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.