லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!

Updated: Sat, Jun 08 2024 23:37 IST
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா! (Image Source: Google)

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டம் இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா, தனஞ்செயா டி சில்வா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 47 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 21 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சௌமீயா சர்க்கார், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் லிட்டன் தாஸ் 36 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் வங்கதேச அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச அணி பெறும் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது. இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா சாதனை படைத்து அசத்தியுள்ளார். 

இப்போட்டியில் வநிந்து ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 108ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் எனும் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். முன்னதாக லசித் மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை