டி20 உலகக்கோப்பை: ஆஸ்கர், நபி அசத்தல்; நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா ஸஸாய் - முகமது ஷசாத் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் இருவரும் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹஸ்ரதுல்லா ஸஸாய் 33 ரன்னிலும், முகமது ஷசாத் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்கர் ஆஃப்கானுடன் இணைந்த கேப்டன் முகமது நபி அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார்.
அதன்பின் 31 ரன்களை குவித்திருந்த ஆஸ்கர் ஆஃப்கான் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் முகமது நபி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
Also Read: T20 World Cup 2021
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. நமீபியா அணி தரப்பில் ட்ரெம்பால்மென், ஜான் நிக்கோல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.