தோனியின் ஆலோசனை அணிக்கு பக்கபலமாக இருக்கும் - விராட் கோலி
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனிற்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் தொடங்கும் இத்தொடரான நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓவ்வொரு அணி தங்கள் அணி வீரர்களையும் அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மாதமே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் மிக முக்கியமாக இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் நிச்சயம் இந்தாண்டு உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கோலி, “மகேந்திர சிங் தோனி மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்தவர். அதிலும் தற்போது ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ள இந்த சூழலில் திரும்பி வருவதில் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவர் எப்போதுமே நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தார்.
அவர் விளையாடும் போது தான் நாங்கள் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினோம். இப்போது மீண்டும் அதே வாய்ப்பைத் தொடர அவருக்கு வாய்ப்பு உள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
குறிப்பாக அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களுக்கு அவரது அனுபவம் மற்றும் அவரது யுக்திகள் மிகப்பெரும் பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.