டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 177 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 7ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜார்ஜ் முன்ஸி ஒரு ரன்னிலும், மேத்யூ கிராஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டி ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மைக்கேல் ஜோன்ஸ் - கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோன்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டனும் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 27 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என மொத்தம் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத மைக்கேல் ஜோன்ஸ் ஒருகட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 55 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டர்கள் என மொத்தம் 86 ரன்களை எடுத்திருந்த அவர், ஜோஷுவா லிட்டில் பந்துவீச்சில் மார்க் அதிரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. அயர்லாந்து தரப்பில் கர்டிஸ் காம்பெர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.