டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்து கடைசி கட்ட பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
மொத்தம் 45 நாட்கள் நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பை தொடரை வெல்வதற்காக 16 அணிகள் போட்டிப்போடவுள்ளது. ஐசிசி தரவரிசையில் குறிப்பிட்ட காலநேரத்தில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாகவும், மற்ற அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையிலும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். அந்தவகையில் நாளை தகுதி சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.
தகுதிச்சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 21 முடிவடையும் நிலையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அக்டோபர் 22-ம் தேதியன்றே தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியாக அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது ஐசிசி. இன்று டி20 உலகக்கோப்பையில் கலந்துக்கொள்ளும் அனைத்து நாட்டு அணிகளின் கேப்டன்களும் சந்தித்துக்கொள்வதற்கான நிகழ்ச்சி நடைபெற்றன. டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே 16 அணிகளை சேர்ந்த கேப்டன்களும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஏனெனில் பொதுவாக சூப்பர் 12 சுற்றுக்கே அழைப்பு விடுக்கப்படும்.
அனைத்து கேப்டன்களையும் ஒன்றாக அமரவைத்து செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர். அதற்கு ஒவ்வொருவரும் தங்களது அணியின் பலம் மற்றும் பயிற்சிகள் குறித்து பேசியதை பார்ப்பதற்கே சிறப்பாக இருந்தது. இதன்பின்னர் 16 பேரும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.