டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை கடைசி பந்தில் வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஷகில் அல் ஹசன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹுசைன் ஷாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹுசைன் ஷாண்டோ அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் நகர்வா, பிளெசிங் முசரபானி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வெஸ்லி மதவெரெ 4 ரன், கேப்டன் கிரெய்க் எர்வின் 8 ரன், மில்டன் ஷும்பா 8 ரன், நட்சத்திர வீரர் சிக்கந்தர் ரஸா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்மளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - ரெஜிஸ் சகாப்வா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் சகாப்வா 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில் சீல் வில்லியம்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 64 ரன்களில் சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரில் எவன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நகர்வா அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி ஜிம்பாப்வே அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். ஆனால் ஓவரின் ஐந்தாவது பந்தில் தூக்கி அடிக்க முயற்சித்து அவரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய முசரபானியும் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் மொசடெக் ஹொசைன் வீசிய அந்த கடைசி பந்தில் விக்கெட் கீப்பரின் தவறால் அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பந்திலும் ஜிம்பாப்வே அணியால் இலக்கை எட்டமுடியவில்லை.
இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.