டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை 128 ரன்னில் சுருட்டியது இலங்கை!
எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்து, நேற்று முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும், ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹாபர்ட்டில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் பால்பிர்னி ஒரு ரன்னிலும், லோர்கன் டக்கர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் - ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் ஸ்டிர்லிங் 34 ரன்களிலும், டெக்டர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய அயர்லாந்து வீரர்களால், இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மஹீஷ் தீக்க்ஷன, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.