டி20 உலகக்கோப்பை: கிங் கோலி இஸ் பேக்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் ஆசாமை, 2ஆவது ஓவரில் தனது பந்திலேயே வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். பாபர் ஆசாம் ரன்னே அடிக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ரிஸ்வானையும் 4 ரன்னுக்கு அனுப்பினார் அர்ஷ்தீப் சிங்.
அதன்பின்னர் ஷான் மசூத் மற்றும் இஃப்டிகார் அகமது இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஃப்டிகார் அகமது, 34 பந்தில் 51 ரன்கள் அடித்த நிலையில், அவரை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் முகமது ஷமி.
அதன்பின்னர் ஷதாப் கான் 5, ஹைதர் அலி 2 ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஷான் மசூத் அரைசதம் அடித்தார். கடைசியில் ஷாஹீன் அஃப்ரிடி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 160 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்களையும், இஃப்திகார் அஹ்மத் 51 ரன்களையும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 4 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் சூர்யக்குமார் யாதவ் 15 ரன்களிலும், அக்ஸர் படேல் 2 ரன்களிலும் வெளியேறி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தினர். அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இதனால் கடைசி மூன்று ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற 48 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அதன்படி ஆட்டத்தின் 18ஆவது ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீச, அதனை எதிர்கொண்ட விராட் கோலி அந்த ஓவரில் 17 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார். அதன்பின் மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி விராட் கோலி தான் ரன் மெஷின் என்பதை மீண்டும் நிரூப்பித்தார்.
இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், 20ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இறுதியில் 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி ஆட்டத்தின் போக்கை தன்வசப்படுத்தினார். அதன்படி மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களை எடுக்க, அடுத்த பந்தை சிக்சருக்கு விளாசிய கோலி ஆட்டத்தின் வெற்றியைப் இந்தியா பக்கம் திருப்பினார்.
இறுதியில் 2 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் ஆட்டமிழக்க, அனைவரது கவனமும் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் நவாஸ் தனது ஓவரின் 5ஆவது பந்தை ஒயிடாக வீச அணியின் ஸ்கோரும் லெவலானது.
இறுதியில் இந்திய அணி கடைசிப் பந்தில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி கடந்தாண்டு ஏற்பட்ட தோல்விக்கு பழித்தீர்த்துக்கொண்டது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 53 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் என விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.