டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 117 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. இதில் இன்று அடிலெய்டில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் வெஸ்லி மதவெரே ஒரு ரன்னிலும், கேப்டன் கிரேய்க் எர்வின் 3 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரேஜிஸ் சகாப்வா 5 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சீயன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 28 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்ஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ரஸா 24 பந்துகளில் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் நெதர்லந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியானுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.2 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது.
நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகெரன் 3 விக்கெட்டுகளையும், பிராண்டன் குளோவர், வான் பீக், பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.