டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலியின் பங்களிப்பு குறித்து ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் முன்னதாகவே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள ஹர்ஷல் படேல் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் ஃபீல்டிங் துறையும் சற்று சொதப்பலாக செயல்படுவதால் இந்த உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறை சற்று அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டுக்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கிய அவர் ஜாம்பவான் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். அதிலும் டி20 உலக கோப்பையில் 800+ ரன்களைக் குவித்து 2014, 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த உலக கோப்பைகளில் தொடர்நாயகன் விருதுகளை வென்ற அவரிடம் ஏராளமான அனுபவமுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை தொடர் நடைபெறும் ஆஸ்திரேலியாவில் 2014 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 2 சதங்களை அடித்த அவர் 2015இல் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதமடித்தார்.
இந்நிலையில் தன்னுடைய வாழ்நாளில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியை போன்ற மகத்தான வீரரை பார்த்ததில்லை என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கேப்டனாக இருந்த போது தன்னுடைய அணியை சிறப்பாக வழி நடத்தினார். அதிலும் குறிப்பாக அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது அற்புதமானது. மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட் வரலாற்றில் அவரை தவிர மிகச்சிறந்த வீரரை நான் பார்த்துள்ளேனா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் செய்துள்ள சாதனைகள் நம்ப முடியாதது. அவருடைய புள்ளி விவரங்கள் அளப்பரியது.
மேலும் விராட் கோலியின் உடற்பயிற்சி கலாசாரம் பாராட்டத்தக்க ஒன்றாகும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் அவர் இந்திய கிரிக்கெட்டில் என்ன செய்துள்ளார் என்பதைப் பார்த்தாலே தெரியும். அதன் காரணமாகவே இந்திய அணி தற்போது கிரிக்கெட்டின் வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.