டி20 உலகக்கோப்பை: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதம்; இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில் இன்று அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதற்கிடையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக மீண்டும் ரிஷப் பந்தே பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இன்னிங்ஸின் முதல் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்ட கேஎல் ராகுல் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரிலேயெ விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இப்போட்டியிலாவது அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் 28 பந்துகளில் 27 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்த சீசனின் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என அதிரடி காட்ட தொடங்கிய நிலையில், அவருக்கு முட்டுக்கட்டைப் போட்டார் ஆதில் ரஷித். இதனால் இந்த போட்டியில் இந்திய அணி 150 ரன்களையாவது எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் ஒருமுனையில் விராட் கோலி வழக்கம்போல் தனது கிளாசி ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் பவுண்டரிகளாக பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 39 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், அடுத்த பந்திலேயே ஆதில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் அரைசதம் கடந்து அணிக்கும் நம்பிக்கையளித்தார். இதற்கிடையில் ரிஷப் பந்த் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும் மனம் தளராத ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சரை விளாசி கடைசி பந்தில் ஹிட் விக்கெட்டானார்.
இதனால் 20 ஓவர்கள் இந்திய அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 63 ரன்களையும், விராட் கோலி 50 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.