பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - மேத்யூ ஹைடன்!

Updated: Tue, Nov 08 2022 20:26 IST
T20 World Cup: Babar To Rediscover His Form In Semis, Belives Pakistan Mentor Matther Hayden (Image Source: Google)

டி20 உலக கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் ஐந்து போட்டிகளில் விளையாடி மொத்தமே 39 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹைடன், “நாம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்குமே அவர்களது வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் இருக்கும். அவர்களது பாதையில் சவால்களும் தடைகளும் நிறையவே இருக்கும். அதை நீங்கள் உடைக்கும் போது தான் உங்களுடைய மகிமை அனைவருக்கும் தெரியும். அப்படிதான் சிறந்த வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

பாபர் ஆசாமிடம் அந்த மகிமை இருப்பது குறித்து எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அவர் நிச்சயம் சிறந்த வீரர்களுக்கு ஒரு படி மேலே இருப்பார். மக்கள், பாபர் ஆசாம் குறித்து பல கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் அவர் அருகே இருக்கும் நபர்களுக்கு மட்டும் தான் பாபர் ஆசாமின் கிரிக்கெட் குறித்து தெரியும். கிரிக்கெட் நிச்சயம் கடினமான விளையாட்டு. நீங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அரை சதமோ, சதமோ 140 ஸ்ட்ரைக் ரேட் என அடிக்க முடியாது.

நாம் ரன்களை அடிக்க முடியாமல் சில காலம் அமைதியாக இருக்கும் தருணமும் வரும். உங்களுக்கு எல்லாம் இயற்கையை பற்றி நிறையவே தெரியும். புயலுக்கு முன் நிச்சயம் அமைதி நிலவும். அதே போல் தான் பாபர் அசாம். இப்போது பேட்டிங்கில் அமைதியாக இருக்கலாம், ஆனால் நான் உலகத்துக்கு சொல்வதெல்லாம் புயலை போன்ற ஒரு ஸ்பெஷல் ஆட்டம் பாபர் அசாமிடமிருந்து நிச்சயம் வரும்.நியூசிலாந்து அணியும் திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.

அவர்களுடைய பந்துவீச்சு சமநிலை வாய்ந்ததாகவும், அனுபவம் நிறைந்ததாகவும் இருக்கும். நான் டிம் சவுதிக்கு எதிராக விளையாடி இருக்கிறேன் என்றால் அந்த அணியில் எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நியூசிலாந்தை பொறுத்தவரை பார்ப்பதற்கு சாதாரணமாக தான் இருப்பார்கள் .

ஆனால் அவர்கள் விளையாடும் விதம் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அவர்கள் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நினைக்கிறார்கள்.அந்த திறமை அவர்களிடம் இருக்கிறது. நிச்சயம் நியூசிலாந்து எங்களுக்கு ஆபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை