டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!

Updated: Thu, Nov 03 2022 13:04 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில் மீண்டும் ஒரு த்ரில் வெற்றி கிடைத்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது. இதன்பின் ஆடிய வங்கதேசத்திற்கு மழையின் காரணமாக 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் போதும் என அறிவித்தனர். ஆனால் 145 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோற்றது.

இந்த போட்டியில் கடைசி ஓவர் த்ரில், மழை குறுக்கீடு, ஓவர்கள் குறைப்பு என பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறிய போதிலும், விராட் கோலி செய்த சம்பவங்கள் தான் பேசுப்பொருளாகியுள்ளது. அதாவது கோலி பேட்டிங் செய்த போது ஒரே ஓவரில் 2 பவுன்சர்கள் போடப்பட்டது. இதற்கு கோலி நோ பால் கேட்டவுடன் அம்பயர்களும் கொடுத்தனர். அப்போது வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கும் கோலிக்கும் சிறிய பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் கோலி செய்த மற்றொரு விஷயமும் பரபரப்பாகியுள்ளது. வங்கதேசத்துடனான போட்டியின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் உத்தியைப் பயன்படுத்தியதாகவும் இது ஐசிசி விதிகளுக்கு விரோதமானது என்றும் வங்கதேச ரசிகர்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவரில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இடுப்புக்கு மேலே ஃபுல் டாசாக வந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தை விராட் கோலி சிக்சருக்கு அனுப்பியதால் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. அது நோபால் இல்லை என அப்போதே பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்த நிலையில், அதே விவாதம் வங்கதேச போட்டிக்குப் பிறகு ட்விட்டரில் ட்ரென்டானது.

தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய வீரர்களுக்கு திகிலூட்டிய வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் ஃபேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கோலி இதைச் செய்ததாக வங்கதேச ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

இந்தியா நிர்ணயித்த 185 ரன்கள் இலக்கை நோக்கி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸும், ஷான்டோவும் விரைந்து கொண்டிருந்தபோது 7-ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார் அப்போது லிட்டன் தாஸ் அடித்த பந்து அக்சர் படேலை நோக்கிச் சென்றது. பாயின்ட் திசையில் நின்று கொண்டிருந்த விராட் கோலியை தாண்டி பந்து சென்றபோது, பந்தைப் பிடிக்காமலேயே பந்தைப் பிடித்தது போலவும், ஸ்டம்பை நோக்கி எறிவது போலவும் சைகை செய்தார். அந்த நேரத்தில் அம்பயர்களாக இருந்த கிறிஸ் பிரவுன் மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகிய இருவரும் இதைக் கவனிக்கவில்லை.

இப்படிச் செய்வது ஐசிசி விதிமுறகளுக்கு முரணானது என வங்கதேச ரசிகர்கள் வாதிடுகிறார்கள். ஐசிசியின் 41.5 -ஆவது விதியை வங்கதேச ரசிகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கோலி போலியாக ஃபீல்டிங் செய்த புகாரை ஆட்டம் முடிந்த பிறகு வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் எழுப்பினார். செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆடுகளம் ஈரமாக இருந்ததைப் பார்த்தோம். ஃபேக் த்ரோவும் நடந்தது. அதற்கு 5 ரன்கள் தண்டனையாகக் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்குச் சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் கெடுவாய்ப்பாக அது நடக்கவில்லை" என்று அவர் கூறினார்.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை