நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதில் இத்தொடருக்காக நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இந்த மைதானமானது பேட்டர்களுக்கு ஒரு கெட்ட கனவாக மாறி வருகிறது.
ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 86ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங் சராசரி 88 எட்டாகவும் மட்டுமே உள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு என்பது 97 ரன்களாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இந்த மைதானத்தின் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிலும் குறிப்பாக இங்குள்ள பிச்சுகளில் கணிக்கமுடியாத பவுன்ஸ் இருக்கும் காரணத்தால் பேட்டர்களுக்கு காயம் ஏற்படும் அபாயமும் உள்ளதாக முன்னாள் வீரர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், மேடுபள்ளமான ரோடு போல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிச்ட் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான் பிட்ச்- யை வழங்க ஐசிசி முயற்சித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐசிசி-யின் அறிக்கையில், “நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐசிசி அங்கீகரிக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இருந்து நிலைமையைச் சரிசெய்து மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்க கடுமையாக உழைத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு மைதானத்தில் நிலையை சரிசெய்ய தோரையமாக குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என்ற நிலையில், ஐசிசியின் இந்த விளக்கமும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.