டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஜேசன் ராய்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும், குரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்ட இங்கிலாந்து, அதற்கேற்ப அருமையாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றது.
ஆனாலும் நெட் ரன்ரேட் நன்றாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. அபுதாபியில் வரும் 10ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜேசன் ராய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரால் நடக்கவே முடியாமல் தான் களத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அரையிறுதி போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ஆடமுடியாமல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு மாற்று வீரராக மற்றொரு அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேசன் ராய் இந்த உலக கோப்பை தொடரில் ஜோஸ் பட்லருடன் இணைந்து இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கங்களை அமைத்து கொடுத்துவந்தார்.
Also Read: T20 World Cup 2021
இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னையாக இருக்கும் நிலையில், டாப் ஆர்டர் பேட்டிங்கைத்தான் அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. இந்நிலையில், ஜேசன் ராய் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.