இந்திய பிளேயிங் லெவனி கேஎல் ராகுல், ரிஷப் பந்த்தில் யாருக்கு இடம்? - பதிலளித்த விக்ரம் ரத்தோர்!

Updated: Sat, Oct 29 2022 20:26 IST
T20 World Cup: K.L. Rahul To Open For India Against South Africa, Says Batting Coach Vikram (Image Source: Google)

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்தபடியே இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. பும்ரா ஆடாதது பெரிய பாதிப்பாக அமையும் என  அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை அது பெரிய பாதிப்பாக அமையவில்லை.

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2ஆவது போட்டியில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை நாளை பெர்த்தில் எதிர்கொள்கிறது. குரூப் 2இல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் அருமையாக விளையாடிவருகின்றனர். தொடக்க வீரர் கேஎல் ராகுலின் ஃபார்ம் தான் கவலையளிக்கிறது. ஆனால் டாப் 3இல் ரோஹித்தும் கோலியும் நன்றாக விளையாடுவதால் ராகுல் ஸ்கோர் செய்யாதது பாதிப்பாக அமையவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக 4 பந்தில் ஒரு ரன்னும், நெதர்லாந்துக்கு எதிராக 12 பந்தில் 9 ரன்களும் மட்டுமே அடித்தார் ராகுல். இதனையடுத்து ஃபார்ம் அவுட்டில் உள்ள கேஎல் ராகுலை நீக்கிவிட்டு, ரிஷப் பந்தை உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஓப்பனிங்கில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி இருப்பதால் அவரை சேர்ப்பதற்காக ரசிகர்கள் கோரினர். எனவே ப்ளேயிங் 11 ஏதாவது மாற்றம் நிகழுமே என்ற எதிர்பார்ப்பும் பெரியளவில் இருந்தது.

இந்நிலையில், ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்ப்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், “ராகுலை நீக்கும் எண்ணமே எங்களுக்கு இல்லை. 2போட்டிகளில் எதையும் முடிவு செய்யக்கூடாது. அவர் பயிற்சிகளில் மிகச்சிறப்பாக தான் செயல்படுகிறார். எனவே எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே விளையாட தான் விரும்புகிறோம்.

ரிஷப் பந்த் ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அணியில் 11 பேருக்கு தானே வாய்ப்பு தர முடியும். ஆனால் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு வரலாம், தயாராக இருங்கள் என கூறி தான் இருக்கிறோம். எனவே வாய்ப்பு ஏற்படும் போது அவர் களமிறக்கப்படுவார். எந்தவொரு வீரராக இருந்தாலும் சில சமயங்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தவகையில் ராகுல் களத்தை பழகிக்கொண்டால் அதிரடி தான்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை