பயிற்சி ஆட்டம்: 9 வீரர்களுடன் விளையாடியும், நமீபியாவை பந்தாடியது ஆஸி!

Updated: Wed, May 29 2024 12:59 IST
பயிற்சி ஆட்டம்: 9 வீரர்களுடன் விளையாடியும், நமீபியாவை பந்தாடியது ஆஸி! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடருக்கு தயாராகும் வகையில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியனது 9 வீரர்கள் மட்டுமே களமிறங்கிய நிலையில், பயிற்சியளரும் ஃபீல்டிங் செய்ய களமிறங்கினர். 

அதன்படி களமிறங்கிய நமீபியா அணியானது அடுத்தடுத்து சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக ஸான் க்ரீன் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள மிட்செல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 5 ரன்களுக்கும், டிம் டேவிட் 23 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வார்னருடன் இணைந்த மேத்யூ வெட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்தார். 

 

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 21 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அசத்தியது. அதுமட்டுமின்றி 9 வீரர்களுடன் மட்டுமே விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது பயிற்சி ஆட்டத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை