டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஹாபர்ட்டில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் ரேஜிஸ் சகாப்வா இரண்டாவது பந்திலேயே ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரெய்க் எர்வின் 9 ரன்கள், வெஸ்லி மதவெரே 22 ரன்கள், சீன் வில்லியம்ஸ் 12 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - மில்டன் ஷும்பா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடியதுடன் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினர்.
மறுமுனையில் 16 ரன்கள் எடுத்து கம்பெனிக்கொடுத்து வந்த மில்டன் ஷும்பா விக்கெட்டை இழல்ல, அவரைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ரியான் பார்லும் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். ஆனாலும் இறுதிவரை களத்தில் இருந்த சிக்கந்தர் ரஸா 82 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில் 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், சிமி சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து அந்த அணி வீரர்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். அதிலும் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் என்ன நட்சத்திர வீரர்கள் அடுத்து மோசமாக ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 27 ரன்னும், ஜார்ஜ் டோக்ரெல்,கரேத் டெலானி தலா 24 ரன்களும் அடித்தனர். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்த்தி 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.