பேட்டிங்கில் செயல்படாததே தோல்விக்கு காரணம் - வநிந்து ஹசரங்கா!

Updated: Sat, Jun 08 2024 20:34 IST
பேட்டிங்கில் செயல்படாததே தோல்விக்கு காரணம் - வநிந்து ஹசரங்கா! (Image Source: Google)

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டம் இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா, தனஞ்செயா டி சில்வா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 47 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 21 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சௌமீயா சர்க்கார், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் லிட்டன் தாஸ் 36 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் வங்கதேச அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச அணி பெறும் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது. இந்நிலையில் பேட்டர்கள் தங்களது வேலையை சரியாக செய்யாததே அணியின் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியின் முதல் 8 - 10 ஓவர்கள் வரை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். ஆனால் அதன் பின்னர் இறுதிகட்ட ஓவர்களில் நாங்கள் மோசமாக பேட்டிங் செய்தோம். எங்களது பந்துவீச்சுதான் எங்களின் பலம் என்று எல்லோருக்கும் தெரியும். நாங்கள் பேட்டிங்கில் 150 முதல் 160 ரன்கள் எடுத்திருந்தால் எங்களது பந்துவீச்சை கொண்டு இப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும்.

நாங்கள் இரண்டு போட்டிகளாக தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறோம். எங்கள் பிளேயிங் லெவனில் முக்கிய நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்திருக்கிறோம். முக்கிய நான்கு வீரர்கள் அவர்களது வேலையை செய்கின்றனர். ஆனால் மீதமுள்ள நான்கு ஓவர்களை நாங்கள் ஆல்ரவுண்டரிடம் வேண்டி இருந்தது. இதுவே எங்களது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை