பயிற்சி ஆட்டம்: மழையால் கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி!

Updated: Wed, Oct 19 2022 15:18 IST
T20 World Cup: Warm Up Game Between New Zealand, India Called Off Due To Persistent Rain (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன.

எஞ்சிய 4 இடங்களுக்கு 8 அணிகள் இரு பிரிவுகளாக போட்டியிட்டுவருகின்றன. இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரக அணிகள் க்ரூப் ஏ-வில் இடம்பெற்று ஆடிவருகின்றன. இதில் அமீரக அணி 2 தோல்விகளை தழுவி தொடரைவிட்டு வெளியேறியது. 2 இடங்களுக்கு மற்ற 3 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தகுதிப்போட்டியில் ஆடிவரும் நிலையில், இந்த 4 அணிகளுக்கு இதுவரை சூப்பர் 12 வாய்ப்புள்ளது. ஆனால் கடைசியில் இந்த 4 அணிகளில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தான் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். தகுதிப்போட்டிகள் நடந்துவரும் அதேவேளையில், நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன.

இந்திய அணி அதன் முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், இன்று பிரிஸ்பேனில் நியூசிலாந்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் ஆடுவதாக இருந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு டாஸ் போட்டு 1.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் பிரிஸ்பேனில் தொடர் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 23ம் தேதி நடக்கும் சூப்பர் 12 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். எனவே இந்த பயிற்சி போட்டி அணி தேர்வுக்கு பயன்படவில்லை என்றாலும், வீரர்களின் பயிற்சிக்கு கண்டிப்பாக உதவியிருக்கும். ஆஸ்திரேலிக்கு எதிராக கடைசி ஒரு ஓவர் மட்டும் வீசிய ஷமி, இந்த போட்டியில் பவர்ப்ளேயில் பந்துவீசுவதை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது நடக்காமல் போயிற்று.

இந்த போட்டிக்கு முன் இதே பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான போட்டியும் மழையால் முடிவில்லாமல் முடிந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி அரைசதம் அடிக்க(51), அந்த அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 2.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் அத்துடன் அந்த போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை