160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான் - மொனாங்க் படேல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். அமெரிக்க அணி தரப்பில் கெஞ்ஜிகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் மொனாங்க் படேல் 50 ரன்களையும், ஆண்ட்ரிஸ் கஸ் 35 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்களையும், நிதீஷ் குமார் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் அமெரிக்க அணியும் 20 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமா இழந்து 159 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இப்போட்டியானது சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது 18 ரன்களைச் சேர்த்து அசத்த, பாகிஸ்தான் அணியானது 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் அமெரிக்க அணியானது சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியிலேயே அமெரிக்க அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து வரலாற்று சாதனையைப் படைத்து அசத்தியுள்ளது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய அமெரிக்க அணியின் கேப்டன் மொனாங்க் படேல், “இப்போட்டியின் டாஸை வென்று முதலில் பந்துவீச வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். முதல் அரைமணி நேரத்திற்கு பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கும். நாங்களும் திட்டமிட்டபடியே பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்தோம்.
இந்த மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி சிறியது. அதை மனதில் வைத்துப் பார்க்கையில் 160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்காகதான் தெரிந்தது. உலகக் கோப்பையில் விளையாடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. அதனால் ஒவ்வொரு பந்திலும் நாங்கள் எங்களுடைய அனைத்து முயற்சியையும் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.