அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் - சரித் அசலங்கா!

Updated: Sat, Jul 27 2024 13:38 IST
Image Source: Google

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

மேலும் இத்தொடர் முதல் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரும் செயல்படவுள்ளதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேசமயம் இலங்கை அணியிலும் வநிந்து ஹசரங்கா கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது தலைமையில் இலங்கை அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பேசுகையில், “இத்தொடரில் நான் உண்மையில் விரும்புவது எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் வேண்டும். எங்களிடம் நிறைய திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் இருந்து அதிகப் பலனைப் பெற்று, அவர்களைப் போட்டிகளில் வெற்றி பெற வைப்பதே முக்கியம்.

நான் அவர்களை சுதந்திரமாக விளையாடச் சொன்னேன், நாங்கள் அவர்களுக்குத் திட்டங்களைக் கொடுத்தவுடன், வெளியே சென்று பயப்படாமல் அவற்றைச் செயல்படுத்துங்கள் என்று கூறியுள்ளேன். மேலும் சமீபத்தில் தான் எங்களுக்கு நல்ல எல்பிஎல் தொடர் அமைந்தது. ஏனெனில் இதுபோன்ற தொடர்களின் மூலம் எங்கள் அணி வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்த முக்கிய பங்காற்றியுள்ளது.

அதனால் இளம் வீரர்கள் எல்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், தேசிய அணியில் விளையாட நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். மேலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் நான்கு தொடக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால் அதில் மூன்று வீரர்கள் டாப் 3 இடங்களில் நிச்சயம் விளையாடுவார்கள். அதேசமயம் ஒரு வீரரை சுழற்சி முறையில் நாங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை