முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ZIM vs NZ, T20I: ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் டிம் ராபின்சன் இணை தொடக்காம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் செஃபெர்டுடன் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 63 ரன்களில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையிலும் 190 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரா 4 விக்கெட்டுகளையும், மபோசா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தியான் மேயர்ஸ் மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளைவ் மடாண்டேவும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின் மற்றொரு தொடக்க வீரர் தியான் மேயர்ஸ் 22 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 9 ரன்களிலும், ரியான் பர்ல் 5 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 44 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த டோனி முன்யோங்கா - தஷிங்கா முசேகிவா ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் முன்யோங்கா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களிலும், முசேகிவா 21 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷ் சோதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score