முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வழக்கம் போல் ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பால்பிர்னி 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 36 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த கர்டிஸ் காம்பேர் - ஜார்ஜ் டக்ரேல் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கர்டிஸ் காம்பெர் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டெலானியும் 2 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் டக்ரேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 39 ரன்களைச் சேர்த்திருந்த மைக்கேல் லெவிட் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய மேக்ஸ் ஓடவுட் தனது அரைசதத்தைக் கடந்ததுடன் 61 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 27 ரன்கள் சேர்த்திருந்த விக்ரம்ஜித் சிங்கும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், வெஸ்லி பரேசி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இறுதிவரை போராடிய நெதர்லாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் அயர்லாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இத்தொடரில் அயர்லாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று வெற்று, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.