இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கியது. இத்தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியானது ஆரம்பம் முதலே தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் அர்பித் வசவதாவின் அரைசதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 203 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அர்பித் வசவதா 62 ரன்களைச் சேர்த்திருந்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், முகமது, கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் விளையாடிய சாய் சுதர்ஷன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 100 ரன்களையும், சாய் சுதர்ஷன் 82 ரன்களையும் சேர்த்தனர். 

சௌராஷ்டிரா அணி தரப்பில் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கட் 6 விக்கெட்டுகளையும், யுவ்ராஜ்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின்னர் 164 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து சௌராஷ்டிரா அணி பேட்டர்கள் மீண்டும் தமிழ்நாடு பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே ஷெல்டன் ஜேக்சன் 38 ரன்களையும், அர்பித் வசவதா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் சௌராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 94 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குர்ஜப்னீத் சிங் 6 விக்கெட்டுகளையும், சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News