ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்த நிலையில், தமிம் இக்பால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்கு பிறகு தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக நேற்று (ஜூலை 6) தனது ஓய்வு முடிவை அறிவித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது எனக்கான முடிவு. நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாட முயற்சித்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த பயணத்தில் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். எனது ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பு மற்றும் நம்பிக்கை என்னை வங்கதேசத்துக்காக சிறப்பாக விளையாடச் செய்தது. வாழ்க்கையில் எனது அடுத்த அத்தியாயத்துக்காக நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது வேண்டுதலில் நானும் இருப்பேன்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதால் தமிம் இக்பால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் எனத் தெரிகிறது.