மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த டாமி பியூமண்ட்!

Updated: Tue, Sep 10 2024 11:53 IST
Image Source: Google

இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்தும் அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய ஃபிரேயா கெம்ப் அரைசதம் கடந்தும் அசத்த, அந்த அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 150 ரன்களையும், ஃபிரெயா கெம்ப் 65 ரன்களையும் சேர்த்தனர். 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ரேய்மண்ட் 22 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் கேபி லூயிஸ், ஏமி ஹண்டர், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லியா பால், அர்லீன் கெல்லி, ஆலிஸ் டெக்டர் என நட்சத்திர வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் அயர்லாந்து மகளிர் அணியானது வெறும் 16.5 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ததுடன் 45 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.  இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணியானது 275 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும்கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய டாமி பியூமண்ட் ஆட்டநாயகி விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டாமி பியூமண்ட் இங்கிலாந்து கிரிக்கெட்டிற்காக சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். இப்போட்டியின் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களைக் கடந்தார். அந்தவகையில், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை எனும் கிளார் டெய்லரின் சாதனையை முறியடித்து டாமி பியூமண்ட் புதிய சாதனையைப் படைத்து அசத்தினார்.

அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த இங்கிலாந்து வீராங்கனை

  • டாமி பியூமண்ட் - 110 இன்னிங்ஸ்
  • கிளார் டெய்லர் - 117 இன்னிங்ஸ்
  • சாரா டெய்லர் - 117 இன்னிங்ஸ்
  • சார்லெட் எட்வர்ட்ஸ் - 125 இன்னிங்ஸ்

மேற்கொண்டு டாமி பியூமண்ட் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தி இருந்தார். இதன்மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதமடித்த வீராங்கனைகள் வரிசையில் டாமி பியூமண்டி மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங் 15 சதங்களுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீராங்கனைகள்

  • மெக் லெனிங் (ஆஸ்திரேலியா) - 15 சதங்கள்
  • சூஸி பேட்ஸ் (நியூசிலாந்து) - 13 சதங்கள்
  • டாமி பியூமண்ட் (இங்கிலாந்து) - 10 சதங்கள்
  • நாட் ஸ்கைவர் பிரண்ட் (இங்கிலாந்து) - 9 சதங்கள் 
  • சமாரி அத்தபத்து (இலங்கை) - 9 சதங்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை