SL vs IND, 1st ODI: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா; காரணம் இதுதான்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் முகது ஷிராஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்திய அணியில் ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி அசத்திய நிலையில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் மறைந்த முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “மறைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட், கடந்த 1974ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒருநாள் போட்டிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு பரோடா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 206 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அன்ஷுமான் கெய்க்வாட், நேற்று முந்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக அன்ஷுமான் கெய்க்வாட்டின் மருத்துவ செலவிற்காக பிசிசிஐ தரப்பில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கெய்க்வாட் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பிசிசிஐ, ஐசிசி உள்ளிட்டோர் தரப்பில் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா(கே), ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலாகே, அகிலா தனஞ்செய, அசித்த ஃபெர்னாண்டோ, முகமது ஷிராஸ்
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்தியா: ரோஹித் சர்மா(கே), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.