பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி ஒரேயொரு போட்டியில் மட்டும் ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்கியது. அதற்கு ஒரே நிற ஜெர்சியில் இரு அணிகள் விளையாட கூடாது என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டதே காரணமாக அமைந்தது. இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நீல நிற ஜெர்சியில் விளையாடியதால், இந்திய அணி ஆரஞ்சு ஜெர்சிக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த விதிகளில் தளர்வு ஏற்பட்டது. இதனால் எந்த அணியும் மாற்று ஜெர்சியில் விளையாட வேண்டிய நிலை இல்லை. ஆனால் திடீரென உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மாற்று ஜெர்சியில் இந்திய அணி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் ஆர்ஞ்சு ஜெர்சியில் இந்திய அணி களமிறங்க போவதாகவும், அதற்காகவே பயிற்சிக்கான ஜெர்சி மற்றும் உடைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் பலரும் விரக்தியை வெளிப்படுத்தி வந்தனர். சொந்த மண்ணில் உலகக்கோப்பையை நடத்தும் போது எதற்காக இந்திய அணி மாற்று ஜெர்சியில் களமிறங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. பிசிசிஐ கவுரவ பொருளாளரான ஆஷிஷ் ஷெல்லர் பேசுகையில், “பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது மாற்று ஜெர்சியில் இந்திய அணி களமிறங்கப் போவதாக வெளியான தகவல் அனைத்தும் தவறானவை தான். அந்த தகவல் அனைத்து அடிப்படை ஆதாரவமற்றவை. அவையனைத்தும் கற்பனை கதைகள் தான். இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி நீலம் தான். நீல நிற ஜெர்சியில் தான் உலகக்கோப்பையை விளையாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.