ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் முக்கியமான தொடராக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவுக்கான ஆட்டம் ஒன்று மும்பை மற்றும் அசாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அசாம் அணி வீரர்கள் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தாக்கூரி 31 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் அந்த அணி 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துடன், வெறும் 84 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 10.1 ஓவர்களை வீசியதுடன் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஷர்தூல் தாக்கூர் ரஞ்சி கோப்பையில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஷர்துல் தாக்கூரை நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.